தமிழக மாவட்டம் தருமபுரியில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வனப்பகுதிக்கு வந்தன. அங்கே வறட்சி நிலவுவதால், யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித் திரிந்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
உணவு, தண்ணீர் தேடி சுற்றித்திரிந்த காட்டு யானைகளில் ஒரு ஆண் யானை, கடந்த 20 நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரியூர், நெருப்புர், ஏமனூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது.
அங்கிருக்கும் விவசாய நிலங்கலில் புகுந்து பயிர்களை நாசம் செய்ததுடன் பொதுமக்கள், கால்நடைகளை தாக்கியதாக கூறப்படுகின்றது. இதுபோல தொடர்ந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், வனத்துறையினர் போராடி ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பகுதிக்குள் அந்த யானையை விரட்டியடித்தனர்.
ஆனால் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் அந்த யானை புகுந்து மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தது. இதனால், மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்தது.
இந்நிலையில், வனத்துறையினர் நேற்று நெருப்பூர் கிராமம் பதனவாடி பகுதியில் சுற்றித்திரிந்த யானையை பிடிக்க முடிவு திட்டமிட்டனர்.
அதன்படி, முத்தையன் கோவில் தடுப்பணை வனப்பகுதியில் யானையை விரட்டி சென்ற வனத்துறையினர், யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர், மயக்க நிலையில் இருந்த யானையை, மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கயிறு கட்டி கிரேன் உதவியுடன் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.
தற்போது அந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டதையடுத்து, ஒற்றை காட்டு யானையால் பாதிப்புக்கு உள்ளான கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.