வவுனியாவில் தனியார் மருந்தகம் ஒன்றின் அசமந்தம், தாயின் திறமையால் உயிர் தப்பிய சிசு!

வவுனியாவின் கந்தசாமி ஆலயத்திற்கு மிக அருகில் இயங்கி வரும் பிரபல தனியார் மருந்தகம் ஒன்றின் அசமந்தப் போக்கினால் பெறுமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஏற்படவிருந்த பாரிய அபாயம் ஒன்று குறித்த கர்ப்பிணிப் பெண்ணின் துறைசார் அனுபவத்தால் மயிரிழையில் தடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.


வவுனியாவில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்ணொருவர் மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பரிசோதித்த வைத்திய நிபுணர் தனியார் மருந்தகத்தில் சில மாத்திரைகளை வாங்குமாறு சீட்டு ஒன்றை எழுதி வழங்கியுள்ளார்.
குறித்த சீட்டை வவுனியா நகரின் பிரபல மருந்தகம் ஒன்றுககு எடுத்துச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் அதனை காண்பித்து அதற்குரிய மாத்திரைகளை கோரியபோது
குறித்த சீட்டில் வைத்திய நிபுணரின் இரப்பர் முத்திரை இல்லை எனக்கூறி திரும்ப அனுப்பப்பட்டு மீண்டும் அவர் வைத்திய நிபுணரிடம் சென்று இரப்பர் முத்திரை பதித்து துண்டுச் சீட்டை எடுத்து வந்து மீண்டும் அந்த மருந்தகத்தில் கொடுத்தபோது அவருக்கு வழங்கப்பட வேண்டிய மாத்திரைக்கு பதிலாக அபாயகரமான கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியுள்ளனர்.
குறித்த கர்ப்பிணிப் பெண் ஏற்கனவே தனியார் மருத்தகம் ஒன்றில் நிர்வகித்தவர் என்ற வகையில் அவருக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் சந்தேகம் ஏற்பட்டதால் அதை உட்கொள்ளாமல் கடமையில் இருந்த வைத்தியரிடம் அதை காண்பித்த போதுதான் அந்த மாத்திரைகள் கருக்கலைப்புக்கான மாத்திரைகள் என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
குறித்த மாத்திரையை அந்த கர்ப்பிணிப் பெண் உட்கொண்டு இருந்தால் ஒன்பது மாதங்களை கடந்த கருவாக இருக்கின்ற குழந்தையின் உயிருக்கே அது ஆபத்தாக அமைந்திருக்கும் என்ற உண்மையை அறிந்து கொண்ட அவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக நாளைய தினம் குறித்த மருந்தகங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு முறையிட உள்ளனர்.
வைத்தியர்களின் அறிவுறுத்தலின்படி தனியார் மருந்தகஙகளில் வழங்கப்படும் மாத்திரைகள் சரியானவையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவற்றை உட்கொள்ளும் சாதாரண மக்களுக்கு பொறுப்பற்ற விதத்தில் மருந்துகளை விநியோகிக்கும் இவ்வாறான மருந்தகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுத்துள்ளனர்.
குறைவான ஊதியத்தில் ஊழியர்களை அமர்த்தும் நோக்கில் முறையான பயிற்சி பெறாத மருந்துகள் தொடர்பான துறைசார் அறிவற்ற பணியாளர்களை மருந்தகங்களில் வேலைக்கு அமர்த்தி இருப்பதும் முறையான அனுமதி அல்லது முறையான அறிவுறுத்தல்களையும் பின்பற்றாத நிலையில் வவுனியாவில் பல மருந்தகங்கள் இயங்கி வருவதும் இவ்வாறான தவறுகள் மேலும் அதிகரிக்க காரணமாக அமைந்துவிடுகின்றன.
சுகாதாரத் துறையினர் இது தொடர்பில் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு முறையற்ற மருந்தகங்கள் மீதும் மருந்தகங்களில் உரிமையாளர்கள் மீதும் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. குறித்த இந்த மருந்தகத்தின் உரிமையாளர் வவுனியா வர்த்தகர்கள் மத்தியில் ஓர் முக்கிய இடத்தில் இருப்பதாக அறியமுடிகிறது. இவர்களே இவ்வாறான தவறை செய்யும் போது ஏனைய மருந்தகங்களை கட்டுப்படுத்துவது யார்? என்று பலரும் தமது கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர்.