EPDP MP யால் உயிருக்கு அச்சுறுத்தல்?இதுவா வவுனியாவுக்கு கிடைத்த மாற்றம்?

வவுனியாவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நிர்வாகத்திறனற்றவர் என தெரிவித்து மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் அலுவலகத்திலிருந்து தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஶ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் புதிய அதிபர் நியமனத்தை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்திருந்தனர்.

அதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் அலுவலகத்தில் இருந்து கதைப்பதாக தொலைபேசி அழைப்பொன்று வந்தது என குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாம் இன்றுபோராட்டம் மேற்கொள்ளவிருந்த நிலையில் அழைப்பை ஏற்படுத்திய அவர் ஆர்பாட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் இல்லாவிடில் இதற்கான பின்விளைவுகளை சில நாட்களில் அனுபவிப்பீர்கள் என்று அச்சுறுத்தியிருந்தார்.

ஆகவே எனக்கும் எனது குடும்பத்திற்கு என்ன நடந்தாலும் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனே பொறுப்புக் கூறவேண்டும் என்று அபிவிருத்திச் சங்க செயலாளர் வ.சற்குணவதி தெரிவித்துள்ளார்.

மேலும் அதிபர் நியமன விடயத்தில் அரசியல்வாதி ஒருவர் தலையிடுகின்றமை எமக்கு தெரியும். ஆனால் திலீபன் தலையிடுகிறார் என்று எமக்கு தெரியாது.

இன்று அவரது அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தமையால் எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.இது குறித்து சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில் வவுனியாவில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முக்கிய பெறுப்பில் உள்ள அரச அதிகாரிகள் தமது கடமையை மறந்து கட்சி சார்ந்து செய்யப்படுவதால் அவர்கள் ஊடாக இவ்வாறானவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் அதைவிட அரச சேவைகளை உடனடியாக பெற முடியாது அலைக்கழிக்கப்பட்டு வழங்கப்படலாம் என்றனர்.